Friday, September 14, 2012

கரிசலாங்கண்ணி - 9

கரிசலாங்கண்ணிகரிசலாங்கண்ணிகரிசலாங்கண்ணி



கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது.
மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%

இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.
உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.
புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.
ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். 
சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்கு குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப் பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

மஞ்சள் காமாலைமுதல் அனைத்து வகை காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கதிற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை மாறிவிடும்.

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்தி கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்
. கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

No comments:

Post a Comment