மருத்துவக் குணங்கள்:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இன்றைய காலகட்டத்தில் 20 வயது இளைஞன் கூட தலைமுடி நரைத்து, 40 வயதைத் தாண்டியவர்போல் காட்சியளிக்கிறான். இந் நிலைக்கு முக்கிய காரணம் உணவு முறை மாறுபாடும், போதிய உடல் உழைப்பும் இல்லாததுதான். இத்தகைய நிலை மாற சித்தர்கள் தங்களின் தவப்பயனால் மனிதன் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர். அதுதான் காயகற்பம். பழங் காலத்தில் இந்த காயகற்பத்தைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ்ந்தனர்.
இப்போது நவீன நாகரீகத்தில் இம்முறை மாறி மேலைநாட்டு மோகத்தில் திளைத்ததன் விளைவுதான் 25 வயதிலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு என பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி அவதி யுறுகின்றனர். இதற்குக் காரணம் நம் முன்னோர்களும், சித்தர்களும் கூறிய அறிவுரைகளையும் மருத்துவ முறைகளையும் பின்பற்றாததே. சித்தர்கள் மனிதன் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள். அவற்றில் ஒன்றான கற்ப முறைகளை நாமும் பின்பற்றி நம் தலைமுறைகளும் பயன்படுத்துமாறு செய்ய முனைய வேண்டும். கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும். அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.
உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும். வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர். இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.
வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும்.
இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார். வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும்.
சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், அருகம்புல் பொடி 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள். இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.
உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.
உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.
பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.
சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
No comments:
Post a Comment