சைவம், அசைவம் என இரண்டு வகை சமையலிலும் மணக்கும் லவங்கப் பட்டைக்கு எப்போதும் முதலிடம் தான். பட்டையை பொடி செய்து வைத்து தாளிப்பது மற்றும் அரைப்பதில் சேர்க்கலாம். உடல் ஆரோக்யத்திலும் லவங்கப் பட்டையின் பங்கு முக்கியமானது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். லவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி மற்றும் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். லவங்கப் பட்டையுடன் சுக்கு, ஓமம் மூன்றும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து காலை, மாலை உணவுக்கு பின்னர் சாப்பிட்டால் அனைத்து விதமான வாயுக் கோளாறுகளும் நீங்கும்.
லவங்கப்பட்டை, நிலவேம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் பூச்சிக் கடிகள் குணமாகும். இருமல் பிரச்னை உள்ளவர்கள் லவங்கப்பட்டையுடன் அக்காரா மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு மற்றும் இருமல் விலகும். லவங்கப்பட்டையுடன், அதிவிடயம் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
இதில் ஐந்து கிராம் அளவு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். லவங்கப் பட்டையுடன், மாம்பருப்பு, கசகசா இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை 100 மிலி தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி குணமாகும். லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது நிற்கும். லவங்கப் பட்டையுடன் சிறு குறிஞ்சான் சம அளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.