Friday, September 14, 2012

பேரிச்சை - 16

பேரீச்சம்பழம்பேரீச்சம்பழம்பேரீச்சம்பழம்



    வாழைப்பழம் போல் இப்பழத்தை மட்டுமே சாப்பிட்டும் உயிர் வாழ்கிறார்கள்.பேரீட்சை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைச் சீனிக்குப் பதில் இப்பழங்களை பயன்படுத்தலாம். 

    மருத்துவக் குணங்கள்:

    இலகுவில் உடலில் சேரும் சர்க்கரைச் சத்து உள்ளதால் உடனடி சக்தி, தெம்பு தரும்.

    சளி, இருமல், ஆஸ்துமா, விரைந்து சரியாகும்.
    இரத்தம் சுத்தம், விருத்தி.

    தேனுக்கு இணையாக இப்பழம் சிறப்புப் பெறுகிறது.
    உடல் உறுதி கூட்டும் உயர்ந்த உணவு.

    மலச்சிக்கல் நீக்கி குடலை பாதுகாக்கும்.

    உடல் வளம், இளமை, உடல் எடை கூடும்.

    எல்லா இயற்கைச் சாறுகளிலும் தேனுக்குப் பதில் பேரீட்சை சேர்த்து ஆரோ க்கியம் பெறலாம்.

    இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

    இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.

    வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

    ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

    பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

    குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.

    பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

    சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். 

    நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

    பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

    பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

    இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
    எலும்புகளை பலப்படுத்தும்.
    இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

    முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
    புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

    பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது.

    இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.

உலர்ந்த திராட்சை - 15

உலர்ந்த திராட்சைஉலர்ந்த திராட்சைஉலர்ந்த திராட்சை



மருத்துவக் குணங்கள்:

ஆரம்ப காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிஸ்மஸ் பழம் எனப் பெயரிட்டனர். பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயாசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது தான் இந்த உலர்ந்த திராட்சை.

இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் 
மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச்சிக்கல் தீரும்.

குடற்புண் ஆற அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

கற்றாழை - 14

கற்றாழைகற்றாழைகற்றாழை



மருத்துவக் குணங்கள்:

கோடைகாலம் வந்துவிட்டாலே, எல்லோருக்கும் ஒருவிதப் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். எப்படித்தான் இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ என்ற மன அழுத்தமும் ஏற்படும் இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் பல அரிய மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை.
வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரும்! வெயில் காலத்தில் வெப்ப சரீரமான பித்த உடம்பே அதிகம் பாதிக்கப்படுகிறது. வெயில் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கவும், உடல் வெப்பத்தைப் போக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்றாழை என்றாலும், சோற்றுக் கற்றாழை என்றாலும் ஒன்றுதான்.

கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரி¢ச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும்.
சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்..

உடல் எப்போதும் கோழி வயிறுபோல சூடாக இருப்பவர்களும் தேகத்தில் தோல் எரிச்சலாக இருக்கிறது என உணர்கிறவர்களும் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.

இதனால் நல்ல உறக்கம், மனப் பதட்டம் குறைந்து அமைதியும் உடல் நலமும் கிடைக்கும். வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.

உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். 

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.

இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.

எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

குப்பைமேனி - 13

குப்பைமேனிகுப்பைமேனிகுப்பைமேனி



மருத்துவக் குணங்கள்:

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.

இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். 
பதினெட்டு வகை எனவும், கூறுவர். அவை இவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் சாப்பிடவும். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகியவற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியனவற்றில் கடிவாயில் தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இளஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

இந்த இலையின் பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். 

வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும்.

எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

கல்யாண முருங்கை - 12

கல்யாண முருங்கைகல்யாண முருங்கைகல்யாண முருங்கை



மருத்துவக் குணங்கள்:

கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிளகுக் கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளப்பார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள். உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்ட மென்மையான கட்டைகளையும் உடைய மரம். 

விதைகள் கருப்பாக இருக்கும். முருங்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால்
உயிர் பிடித்து வளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். 

மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட வலி தீரும்.

இதன் இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

இதன் இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி கருதரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும்.

இலையை நறுக்கி வெங்காயம் போட்டு தேங்காய், நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

60 மி.லி.இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை அருந்த பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி வீக்கம் கரையும்.

சாறு 1 தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி நீர் எரிச்சல் தீரும்.

இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கண்டங்கத்திரி - 11

கண்டங்கத்திரிகண்டங்கத்திரிகண்டங்கத்திரி



மருத்துவக் குணங்கள்:

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். 

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். 

வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். 
பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். 

நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

தூதுவளை -10

தூதுவளைதூதுவளைதூதுவளை



மருத்துவக் குணங்கள்:

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு.

இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். 
தாதுவைபலப்படுத்தும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.

மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.

தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.

தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும்.
பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.

தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

கரிசலாங்கண்ணி - 9

கரிசலாங்கண்ணிகரிசலாங்கண்ணிகரிசலாங்கண்ணி



கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது.
மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%

இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.
உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.
புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.
ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். 
சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்கு குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப் பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

மஞ்சள் காமாலைமுதல் அனைத்து வகை காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கதிற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை மாறிவிடும்.

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்தி கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்
. கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

வண்ணான் அவுரி - 8

அவுரிஅவுரிஅவுரி



மருத்துவக் குணங்கள்:

அவுரி எனும் குறுந் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும். வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை விளை நிலங்களில் நெல் அறுவடைக்குப் பின் அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல அவுரி 18 வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும். அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர். 

ஆனால் இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது. எளிதில் நோய் தாக்கும் படி பூஞ்சையாக மாறிவிட்டார்கள்.

ஆனால் இப்போது அவுரி நெல்லை விட மதிப்பு வாய்ந்த தாவரமாக மாறிவிட்டது. நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது .குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா என்றும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவுரி சுமார் 3000எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும் தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.

இன்னும் உலகில் இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது. நாம் தான் சந்தோஷமாக நமது இயற்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு செயற்கை சாயங்களை பயன்படுத்தி தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம்

அவுரி இலைகள் சாயம் மட்டும் தருவதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றது .

இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.

அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்.

இதன் இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும் .
இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம்.

அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும். சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம் . அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதயவையின் விஷம் நீங்கும் .

இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம் சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம்.

மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி முறை உள்ளது. ஆனால் அவைகள் தெரியாத நிலையில் அந்த மருத்துவ பொருளை நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் மருந்து சுத்தி ஆகும். அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.

அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம். பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை ஆரமிப்பதற்க்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டு வந்த மருந்துகளின் வீரியத்தைக் குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது தான் வழக்கம்.

இப்போதெல்லாம் வயல்களில் அவுரி இல்லாததால் மாடுகளுக்கும் கண்டதைத் தின்று பலவித நோய்கள் வருகின்றன. பசுவின் பால் கூட இப்போது சுத்தமாக இல்லை நஞ்சு கலந்துவிட்டது .

உத்தாமணி - வேலிப்பருத்தி- 7

வேலிப்பருத்திவேலிப்பருத்திவேலிப்பருத்தி



மருத்துவக் குணங்கள்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இன்றைய காலகட்டத்தில் 20 வயது இளைஞன் கூட தலைமுடி நரைத்து, 40 வயதைத் தாண்டியவர்போல் காட்சியளிக்கிறான். இந் நிலைக்கு முக்கிய காரணம் உணவு முறை மாறுபாடும், போதிய உடல் உழைப்பும் இல்லாததுதான். இத்தகைய நிலை மாற சித்தர்கள் தங்களின் தவப்பயனால் மனிதன் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர். அதுதான் காயகற்பம். பழங் காலத்தில் இந்த காயகற்பத்தைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ்ந்தனர்.
இப்போது நவீன நாகரீகத்தில் இம்முறை மாறி மேலைநாட்டு மோகத்தில் திளைத்ததன் விளைவுதான் 25 வயதிலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு என பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி அவதி யுறுகின்றனர். இதற்குக் காரணம் நம் முன்னோர்களும், சித்தர்களும் கூறிய அறிவுரைகளையும் மருத்துவ முறைகளையும் பின்பற்றாததே. சித்தர்கள் மனிதன் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள். அவற்றில் ஒன்றான கற்ப முறைகளை நாமும் பின்பற்றி நம் தலைமுறைகளும் பயன்படுத்துமாறு செய்ய முனைய வேண்டும். கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும். அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.

உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும். வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர். இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.

வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். 
 இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார். வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும்.

சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், அருகம்புல் பொடி 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள். இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.

உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

அம்மான் பச்சரிசி - 6

அம்மான் பச்சரிசிஅம்மான் பச்சரிசிஅம்மான் பச்சரிசி



மருத்துவக் குணங்கள்:

அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும் மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காமல் இருக்கும். போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும் அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.

ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இலை, தண்டு, பால், பூ ஆகியவை பயன்தரும்.
இதன் பாலை நக சுற்றிக்கு தடவ குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவை போகும். சுக்கில தாது விருத்தியாகும். இதை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும் பின் அனைவரும் அது வெறும் காகிதம் தான் எனக் கூறியதும் அதைத் தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்.. இவ்வாறு வித்தைக் காட்ட இன்னும் பல மூலிகைகள் இருக்கிறது .

தொட்டாற் சுருங்கி - 5

தொட்டாற் சுருங்கிதொட்டாற் சுருங்கிதொட்டாற் சுருங்கி



மருத்துவக் குணங்கள்:

தொட்டாற் சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சுபோல் தட்டி ஒரு மட் குடுவையில் போட்டு கால் படி சலம் விட்டு அடுப்பிலேற்றி வீசம் படியாகசுண்ட, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற சலம் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, 
க
ல்லடைப்பு தீரும்.
இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம் குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்ளின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும்.

இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட் செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மட் குடத்தில்போட்டுச் சலம் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி நீங்கும்.

நெல்லிக்கனி - 4

நெல்லிக்கனிநெல்லிக்கனி



நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும் ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்



நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:
நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.
நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.

குறிப்பு:
நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.

கடுக்காய் - 3

கடுக்காய்கடுக்காய்கடுக்காய்

மருத்துவக் குணங்கள்:


கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள் இம்மருந்தினை காலை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

நூறு கிராம் கடுக்காய் சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை, இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். நரம்புகள் முறுக்கேறும்.

கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும்.

கீழாநெல்லி - 2

கீழாநெல்லிகீழாநெல்லிகீழாநெல்லி
மருத்துவக் குணங்கள்:

நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

கீழாநெல்லி சமூலம் – கரிசலாங்கண்ணி, தும்பை – சீரகம் – பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

கீழ்காய் நெல்லி சமூலம் – சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

கீழா நெல்லியும் – கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.